சனி, 16 ஜனவரி, 2016

எங்க ஊரு மாட்டுப் பொங்கல் -- மனுஷி

எங்க ஊரு மாட்டுப் பொங்கல்
--மனுஷி
மார்கழி மாதம் வந்துவிட்டாலே குளிரெல்லாம் கடந்து ஒருவிதக் கொண்டாட்டம் வந்து தொற்றிக் கொள்ளும் மனதுக்குள். அதிகாலையில் அம்மா எழுப்பிவிட, தூக்கக் கலக்கத்தோடு வாசலில் வந்தமர்ந்தால் சாணி தெளித்து, கோலம் போட்டு வைத்திருப்பார். நானும் பக்கத்து வீட்டுத் தோழிகளும் கோலத்துக்கு அழகாகக் கலர் கொடுத்து, அம்மா ஏற்கனவே பறித்து வைத்திருக்கும் பூசணிப் பூவைச் சாணியில் குழி செய்து அதன் மீது வைத்து, கோலத்தின் நடுவில் வைத்து விடுவோம். என் வீட்டு வாசலில் முடிந்து அடுத்தடுத்துத் தோழிகளின் வீட்டு வாசலில் இந்த வேலைகள் நடக்கும்.
இதற்குள் ஒவ்வொரு வீட்டு வாசலின் முன்பும் வைக்கோல் மற்றும் குப்பைகளைக் கூட்டி, கொளுத்திக் குளிர் காய்ந்து கொண்டிருப்பார்கள் ஆண் பிள்ளைகள். கோலம் போட்டு முடித்த பிறகு நாங்களும் சேர்ந்து கொள்வோம். இப்படித்தான் மார்கழி மாதம் எங்களைக் கடந்து போகும்.
அதன்பிறகு, போகிக் கொண்டாட்டத்தில் தொடங்கும் எங்கள் பொங்கல். போகி அன்று அதிகாலையில் எரிப்பதற்கென முந்தின நாளே கிழிந்த பாய், பயன்படுத்தாத துணி, படித்து முடித்த வாரமலர், சிறுவர் மலர் போன்ற இதழ்கள், நோட்டுப் புத்தகங்கள், கிழிந்த சாக்குப் பைகள் – இவைகளையெல்லாம் சேகரித்து வைத்திருப்போம். டயர்களைக் கொளுத்துவதைத் தவிர்த்திருக்கிறோம். அதன் புகை வாசனை வயிற்றைக் குமட்டி வாந்தி வரச் செய்யும் அந்த அதிகாலையில். அதனால் டயர்களைக் கொளுத்த விரும்புபவர்கள் தெரு முடிவில், சாலை அருகில் போய் கொளுத்திவிட்டு வருவார்கள். போகி அன்று பழைய பொருட்களை எரித்து முடித்து புகை அடங்கும் நேரத்தில் வீட்டைச் சுத்தம் செய்து வெள்ளையடிக்கும் படலம் தொடங்கும். வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் தோட்டத்து வாசலில் கொண்டு போய் வைத்துவிட்டு, வீட்டை ஒட்டடை அடித்து, வெள்ளையடித்து முடிக்க, போகி நாள் முழுக்க ஆகும். அதன்பிறகு பெரும்பொங்கல் அன்றும் வெள்ளையடித்தல் முடிந்து, பொருட்களையெல்லாம் கழுவி, துடைத்துச் சுத்தம் செய்து, வாசற்படி, கதவு இவற்றுக்கெல்லாம் பூசை போட்டு பொட்டு வைத்து,,, அப்பாடி என்றாகிவிடும். இதற்குள் மாவிலைத் தோரணங்கள் தயார் செய்து வைக்க வேண்டும்.
மாட்டுப் பொங்கல்தான் எங்கள் வீடுகளில் விசேஷம். அதனால் பெரும் பொங்கல் என்பது பெரிதாக இருக்காது. பெரண்டைச் செடி, மாவிலை, வேப்பிலை எல்லாம் எடுத்து வந்து வீடுகளில் தோரணம் கட்டுவோம். அப்பா, பெரியப்பா, அண்ணன் எல்லோரும் ஏரிக்கு அல்லது ஏரி வாய்க்காலுக்கு மாட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு போய் மாட்டையும், வண்டியையும் கழுவிக் கொண்டு வருவார்கள். மாட்டு வண்டிக்கும் மாட்டுக்கும் பட்டை போட்டு, பொட்டு வைத்து மாவிலைத் தோரணங்களால் வண்டியை அலங்காரம் செய்து, மாட்டுக் கொம்பில் கலர் கலரா பலூனை ஊதிக் கட்டி, கழுத்தில் சலங்கைக் கட்டி, கலக்கலா ரெடி பண்ணுவோம். நாங்களும் குளித்து முடித்து, பொங்கல் பண்டிகைக்கென எடுத்த பட்டுப் பாவாடைச் சட்டையை அணிந்து கொண்டு தலை பின்னி, டிசம்பர் பூவை வைத்துக் கொண்டு பொங்கலைக் கொண்டாட ஆயத்தமாக இருப்போம். பொங்கல்  பண்டிகை, பங்குனி உத்திரத் திருவிழா – இந்த இரண்டு தருணங்களில் மட்டும் தான் புதுத்துணி எடுக்கும் வழக்கம் எங்கள் வீடுகளில். இப்போது போல நினைக்கும் போதெல்லாம் துணி எடுக்கும் வழக்கம் அப்போது இருக்கவில்லை.
அலங்காரங்கள் எல்லாம் முடியும் தருணம் சூரியன் மேற்கில் இறங்கத் தொடங்கியிருக்கும். எல்லோர் வீட்டு வாசலிலும் அடுப்பு தோண்டி, பானையில் பொங்கல் பொங்கிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பானையில் பொங்கும் நேரம், சுற்றி இருக்கும் என்னைப் போன்ற வாண்டுகள் பொங்கலோ பொங்கலோ எனக் கூக்குரலிட உற்சாகமும் குதூகலமும் சொல்லி முடியாது. பொங்கல் ரெடி ஆனதும், படைத்து  முடித்து பதமான சூட்டில் பொங்கலை இலையில் வைத்து, சங்கு ஊதிக் கொண்டு, தட்டில் ஒரு குச்சியால் அடித்து ஓசை எழுப்பிக் கொண்டு மாடுகளுக்குக் கற்பூரம் காட்டி, அந்தப் பொங்கலைத் தின்ன வைத்து, பிறகு சுற்றி இருக்கும் பிள்ளைகளுக்கு  பூவரச இலை அல்லது உள்ளங்கை அளவேயான வாழை இலையில் பொங்கலும் ஒரு துண்டு கரும்பும் கொடுப்பார்கள். நெற்றியில் பூசிவிடும் விபூதி மணக்க, பொங்கலைச் சாப்பிட்டுவிட்டு, பெரும்பாலும் சட்டையிலேயே துடைத்துக் கொள்வோம். 
எங்கள் அனைவரது கவனமும் பொங்கலின் சுவையை விடவும், அடுத்து ஊர்வலத்துக்குத் தயாராக நின்று கொண்டிருக்கும் மாட்டு வண்டிகளில் எதில் ஏறுவது என்பதில் தான் இருக்கும். நானும் என் தோழிகளும் ஒரே மாட்டு வண்டியில் ஏறி, ஏதாவது ஒரு பக்கத்தில் சேர்ந்தாற்போல் நிற்க வேண்டும். இதுதான் அப்போதைக்கு எங்கள் குறிக்கோள். ஏனென்றால் தயாராக நிற்கும் மாட்டு வண்டிகளில் ஏதாவது ஒன்றில் ஏற்றி விட்டு விடுவார்கள். மாட்டு வண்டியில் கத்திக் கொண்டு போவது மகிழ்ச்சி என்றாலும் கூட, தோழிகளின் தோள்களில் கை போட்டபடி, பட்டுப் பாவடைகள் உரச உரச, பொங்கலோ பொங்கல் என்று கத்திக் கொண்டு போவதில்தான் இரட்டிப்பு, மும்மடங்கு மகிழ்ச்சி. வண்டி கிளம்பியதும் எங்கள் கூச்சலைக் கண்டு மாடு மிரண்டு ஓடுமா என்று தெரியாது. ஆனால், வாலை முறுக்கி விட்டதும் பாய்ச்சல் எடுத்து ஊரெல்லாம் சுற்றி வரும். கரும்பைக் கடித்தபடி, பொங்கலோ பொங்கல் என்று கத்திக் கொண்டு செல்வோம். வயது வந்த பெண்களும் திருமணமான பெண்களும் புடவையும் தாவணியுமாக வீட்டு வாசலில் நிற்பார்கள் அழகுப் பதுமைகளாக. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அகல் விளக்கு வீட்டை இன்னும் அழகாக்கும்.
மாட்டு வண்டி ஊரைச் சுற்றி முடித்து வந்ததும், அடுத்துத் தயாராக ஏதும் வண்டி இருந்தால் அதில் ஏறிக் கொண்டு மீண்டும் ஒரு ரவுண்டு. இப்படியே எட்டு மணி வரையிலும் மாட்டு வண்டியில் ஊர்வலம் நடக்கும்.
மறுநாள் காணும் பொங்கல் அன்று அதிகாலையில் எழுந்ததும் பொங்கல் பொங்கிய தண்ணீரை ஒரு சொம்பில் பிடித்து வைத்திருப்பார்கள். அதைக் கொண்டு போய் வயலில் தெளித்துவிட்டு வர வேண்டும். அங்கிருந்து வந்து குளித்து ரெடியானதும், ஹார்லிக்ஸ் எல்லாம் குடித்து முடித்த பின், அம்மா பொங்கல் காசு தருவார். ஏற்கனவே வைத்திருக்கும் உண்டியலில் காசு நிறையும் நாள் அது. அப்போதெல்லாம் ஐம்பது ரூபாய் என்பது ஒரு பெரிய தொகை எனக்கு. அம்மா கொடுக்கும் ஐம்பது ரூபாயில் தொடங்கும் பொங்கல் காசு கலக்ஷன், அன்று நாள் முடிவதற்குள் ஐநூறைத் தொடும். என் தோழிகள் சிலருக்கு இருநூறு. சிலருக்கு முந்நூறு என்று உண்டியல் நிறையும். அம்மா, அப்பா, அண்ணன், சித்தப்பா, பெரியப்பா, அண்ணி, மாமா, அத்தை, தாத்தா, ஆயா, பக்கத்து வீட்டு அக்காக்கள் – என பொங்கல் காசு தந்து வாழ்த்துவதற்கு ஒரு பெரிய கூட்டமே இருக்கும்.
அன்றைக்கு மாலை நிச்சயமாக தெருவில் உள்ள எல்லார் வீட்டில் இருப்பவர்களும் சினிமாவுக்குப் போவார்கள். பண்ரூட்டி அல்லது வீரப்பார் – இந்த இரண்டு ஊர்களில் தான் தியேட்டர். அப்போதைக்கு ரிலீஸ் ஆன படம், அல்லது தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் படம் பார்த்து தான் பொங்கல் சிறப்பாக முடியும். பெரும்பாலும் எல்லோரது சாய்ஸும் வீரப்பார் தியேட்டர்தான். மாட்டு வண்டியில் தான் பயணம். வெயில் இறங்கும் நேரம் கிளம்பினால், படம் தொடங்குவதற்குள் வீரப்பார் தியேட்டருக்குப் போய்விடலாம். பெரும்பாலும் பொங்கல் காசுதான் தியேட்டர் டிக்கெட் மற்றும் இடைவேளை நேர முறுக்கு, சுண்டல், பஜ்ஜி போன்ற தின்பண்டங்களுக்குக் காலியாகும்.
நினைத்துப் பார்க்கையில் சொர்க்கமாக இருக்கிறது எங்க ஊரு மாட்டுப் பொங்கல். தொலைக்காட்சி இல்லை. அதில் வருகிற பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகள் இல்லை. முகநூல், வாட்ஸ் அப் போன்ற அழகிய அவஸ்தைகள் இல்லை. பொங்கல், பொங்கலாக இருந்தது. கொண்டாட்டமாக இருந்தது. நமக்கான அடையாளமாக இருந்தது.
அவ்வளவு கொண்டாட்டமாக இனியொரு பொங்கல் சாத்தியமா தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக