திங்கள், 11 ஜனவரி, 2016

தாத்தனுடன் ஒரு மாலைப்பொழுது - மனுஷி

தாத்தனுடன் ஒரு மாலைப்பொழுது

தமிழின் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களை இன்று அவரது வீட்டில் சந்திக்கச் சென்றேன். அவர் சொன்னது போலவே மிகச் சரியாக மாலை 4 மணிக்கு வீட்டுக் காலிங் பெல்லை அழுத்தினேன். கையில் ஏதோவொரு நூலை வைத்து வாசித்துக் கொண்டிருந்தவர் புன்னகையுடன் வரவேற்றார். அந்தப் புன்னகையே பெரும் ஆறுதலையும் தெம்பையும் தந்தது. அதற்குக் காரணம் உண்டு.
அவரை முதன்முதலாகச் சந்தித்த அனுபவம் மிகவும் கசப்பானது. அவரது கதைகளை வாசித்திருக்கிறேன். (அவர் தொகுத்த பாலியல் கதைகள் உட்பட). அவரைப் பற்றிய கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். ’தளம்’ மொழி சிறப்பிதழுக்காக அவரோடு ஒரு கலந்துரையாடலுக்காக  அவரது வீட்டில் சந்திக்கச் சென்றோம். பெரிதாக ஒரு வரவேற்பும் இல்லை. கடுகளவும் அவர் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. ஏன் வந்தீர்கள் நான் எதுவும் பேச விரும்பவில்லை என்பதை மிக வெளிப்படையாகச் சொன்னார். என்னைக் கவிஞர் என்று அறிமுகப் படுத்தி இருந்தது அதற்குக் காரணம். கவிதையை ஒரு இராட்சசன் என்று திட்டினார் கலந்துரையாடலின் போது. கவிஞர்களை வெறுத்தார். பாரதியார் உட்பட. மொழி குறித்த அந்தக் கலந்துரையாடல் முடிந்து வெளியேறுகையில் மனம் முழுக்க வருத்தமே மிஞ்சி இருந்தது.

இந்த முறை சந்திக்கச் சென்றபோது நல்லவேளையாக என்னை முன்பே சந்தித்தது ஞாபகம் இல்லை அவருக்கு. அந்த மறதிக்கு ஒரு நன்றி. நானும் கவிஞர் என இந்த முறை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. அவரைச் சந்திக்கச் சென்றவள் என்ற முறையில் பெயரை மட்டும் சொன்னேன். சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் சார்வாகன் குறித்த நினைவுகளை என்னோடு பகிர்ந்து கொண்டார். காலம் சென்ற மனிதரை நாம் எவ்விதம் நினைவு கொள்கிறோம் என்பதை நமது முகக் குறிப்புகளே காட்டிவிடும். இன்று கி.ரா.விடம் அதைப் பார்த்தேன். ஒரு பேத்தியிடம் தனது கடந்த கால அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் தாத்தாவைப் போல பேசினார். தளம் இதழுக்காக சார்வாகன் குறித்த அவரது நினைவுகளைப் பதிவு செய்தேன். தான் பேசுவது பதிவு செய்யப்படுகிறது என்கிற உணர்வு தொடக்கத்தில் அவரிடம் இருந்தது. பிறகு மிக மிக இயல்பாகப் பேசித் தொடங்கினார். எல்லாவற்றையும் சொல்லி முடித்தபின், இந்தளவுக்குப் போதும். நீ எழுதி முடிச்சுட்டு கொண்டு வா என்றார்.

பிறகு, இப்படி பதிவு பண்ணி வைத்து எழுதலாம் என்றால் இனிமேல் நான் எழுத நினைப்பதை இப்படியே பதிவு பண்ணி வைத்து யாராவது எழுதித் தரச் சொல்லலாம் என்றார். நான் வேண்டுமானால் எழுதித் தரட்டுமா என்றேன். பார்க்கலாம் என்று மட்டும் சொன்னார்.

மரணத்தைப் பற்றிப் பேச்சு வந்தபோது, அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் ஆச்சரியமாக இருந்தது. நேற்று தோழி ஜீவலட்சுமியுடன் பேசிக் கொண்டிருக்கையில் நகரத்துச் சூழலில் மரணம், அதன் மதிப்பை இழந்து சாதாரணமாக ஆகிவிட்டதைச் சொல்லி வருத்தப்பட்டோம்.

கி.ரா. இறந்தவர்களைச் சென்று பார்த்து அழுது ஒப்பாரியெல்லாம் வைக்கத் தேவையில்லை. சத்தமில்லாமல் எடுத்துக் கொண்டு போய் அடக்கம் செய்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும். நான் இறந்தால் கூட யாரும் பார்க்க வராதிங்க. மேளம் அடிப்பது, வெடி வெடிப்பது ஒப்பாரி வைப்பது, அப்புறம் பால் ஊத்துற சடங்கு, 16ஆம் நாள் சடங்கு, எதுவும் வேணாம். எரிச்ச சாம்பலைக் கூட அங்கேயே விட்டுடுங்க. அத எதுக்குக் கொண்டு போய் கடலில் எல்லாம் கரைச்சுக்கிட்டு. அதேபோல அஞ்சலிக் கூட்டம் வைக்கறது, போட்டோ வைக்கறது, சிலை வைக்கறது எதுவும் வேண்டாம் என்றார் ரொம்ப இயல்பாக. செத்ததுக்குப் பின் சிலை வைக்காதீர்கள் என்று சொன்ன புதுமைப்பித்தனின் குரல் காதில் கேட்டது.
முதல் முதலில் குறுநாவல் எழுதிய சூழலையெல்லாம் பகிர்ந்து கொண்டார். தமிழ் இந்து நாளிதழில் அவர் எழுதும் மனுசங்க தொடர் குறித்தெல்லாம் விரிவாகப் பேசினார்.
நான் என் தாத்தாவைப் பார்த்ததில்லை. இன்று கி.ரா.வைச் சந்தித்து விட்டு வெளியேறுகையில் என் தாத்தனுடன் பேசிக் கொண்டிருந்த உணர்வைப் பெற்றேன். ஆசிர்வதிக்கப்பட்ட மாலைப்பொழுது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக