செவ்வாய், 26 ஜனவரி, 2016

ஆறு என்றே சொன்னார்கள்

ஆறு என்றே சொன்னார்கள்
-- மனுஷி
முன்பொரு மழை நாளில்
பேருந்து பயணத்தின்போது
அம்மா சொன்னாள்
‘இதான் ஆறு’.
அங்கே
சடசடத்து ஓடிக் கொண்டிருந்தது
அழுக்குநிற தண்ணீர்
பேய் வேகத்துடன்
சில குடிசைகளை இழுத்துக் கொண்டு.

வளைகாப்பு முடிந்து
புகுந்தவீடு செல்கையில்
‘நிறைமாத கர்ப்பிணி ஆத்தைத் தாண்டக் கூடாது’
எனச் சொல்லி
இரண்டு ஊரைச் சுற்றி அழைத்துச் சென்றார்கள்.
அப்போது
வெண்மணலும் நாணல் புதருமாக
புதுப்பொலிவுடன் இருந்தது
வெயிலையும்
அங்கங்கே தெளிந்த நீரையும் சுமந்தபடி.

பள்ளி உணவு இடைவேளையில்
ஆற்று மணலில் ஊற்று தோண்டி
நீர் எடுக்கையில்
நண்பன் சொன்னான்
‘24 ஹவர்ஸ் வாட்டர் சர்வீஸ்.
இல்லப்பா?’.

இப்போது
அட்டைப்பூச்சியைப்போல
நதியின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்கின்றன
ஆற்றுப் பாலத்திற்குக் கீழே
ஊர்ந்து போகும் லாரிகள்.

நோய்மை கொண்ட ஆற்றில்
நாணல் புதர்களுக்குப் பதிலாய்
கருவேல மரங்களும்
வறண்ட புற்களும் மண்டிப்போய்
சிறுவர்களின் கிரிக்கெட் மைதானமாகவும் ஆகிவிட்டன.

எலும்புத் துருத்திக் கொண்டிருக்கும்
வறட்சி தேசத்தின் குழந்தை போல
பரிதாபமாக படுத்திருக்கிறது
ஆறு.

குழந்தை பெய்த சிறு மூத்திரக் குளமென
தேங்கி நிற்கிறது
நதியின் கடைசி மூச்சு
அங்கங்கே.

பின்னாளில்
ஆற்றைக் கடக்கையில்
என் மகளுக்குச் சொல்வேன்
இதை ஆறு என்றே சொன்னார்கள் என.
என் மகளும்
அவள் மகளுக்குச் சொல்ல
மிச்சமிருக்கும் நதியின் சிதைந்த கூடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக